தமிழக அரசியல் பாதையையே மாற்றிப்போட்ட கமல்.. இது உலக நாயகனின் விஸ்வரூபம்!

Film Motion
சென்னை: நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் வேறு ஒரு வகை அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார். இதற்கு அரசியல் என்ற பெயரை விட சமூக மாற்றத்திற்கான புரட்சி என்பது சரியான வார்த்தையாக இருக்கும். "அரசியலுக்கு எப்போது வருவீர்கள் கமல்.." என்று நிருபர்கள் கேட்டபோது, நான் "வாக்களிக்க ஆரம்பித்தது முதலே அரசியலில்தான் இருக்கிறேன்" என்று பதில் வந்தபோதே, 'இவரு வேற மாதிரி' என்பது பலருக்கும் புரிந்துவிட்டது. அரசியல் என்றால், கட்சியும், கறை வேட்டியும்தான் என்ற யூனிபார்ம் சிஸ்டத்தை உடைத்து, மக்களுக்கு ஏற்ப மாற்றத்தை கொண்டுவர தொடங்கியுள்ளார் கமல் என்பதே அவரது சமீபத்திய நடவடிக்கைகள் சொல்லும் பாடம். எந்த விஷயமாக இருந்தாலும், முதலில் மனதில் ஏற வேண்டும். டிவிட்டர் மூலமும், பேட்டிகள் மூலமும் அதைச் செய்தார் கமல். பிறகு களத்திற்கும் புறப்பட்டார். எண்ணூரில் அவர் அதிகாலையில் ஆய்வு செய்வார் என்பதை உளவுத்துறையே கணித்திருக்காது. இது ஏதோ அரசியல்வாதிகள் நடத்தும் ஒப்புக்கு, சப்பான ஆய்வு கிடையாது. சட்டைப்பையில் மைக்கை மாட்டிக்கொண்டு அங்குலம் அங்குலமாக நிலவரத்தை கண்காணித்த ஆய்வு அது.

தமிழக அரசியல் பாதையையே மாற்றிப்போட்ட கமல்.. இது உலக நாயகனின் விஸ்வரூபம்! 04-1509792705-kamal-haasan34

சென்னையின் பூர்வகுடிமக்களான மீனவர்களின் குறைகளை கேட்டறிந்த கமல், அதற்கான தீர்வுகளையும் டிவிட்டரில் வெளியிட்டார். இதோ இன்று விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டதோடு, தீர்வாக 5 லட்சம் நற்பணி இயக்கத்தாரை களமிறக்கி ஆறு, குளங்களை செப்பனிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதான் கமல். இதுதான் அவர் அரசியல். குறைகளை கேட்டுவிட்டு, மனுக்களை குப்பைத்தொட்டிக்கு அனுப்பும் அரசியலில் இருந்து மாறுபட்டு, தீர்வையும் உடனே கண்டறியும் அவசர யுகத்தின் பிம்பம்தான் இந்த அரசியல்.

'நடிகர் கமல்' என்பதாலேயே அவர் கூறும் தீர்வு, சரியானதாக இருந்துவிடுமா என்று கேள்வி எழுப்புவோர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தான் எடுக்கும் முடிவுதான் சரியானது என்று கமலே ஒப்புக்கொள்ள மாட்டார். பணமதிப்பு நீக்க முடிவை வரவேற்றதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டவர் கமல். அதற்காக, இப்போது அவர் கூறும் தீர்வுகளும் அப்படியான குழப்பங்களை தருமோ என்ற சந்தேகமும் வேண்டாம். ஏனெனில், அவரிடம் ஒரு அறிவுசார் வட்டம் உள்ளது. எழுத்து துறையோ, சுற்றுச்சூழல் துறையோ, விவசாயத்துறையோ அதற்காக ஒரு அறிவுஜீவிகளின் குழுவை அவர் லைம் லைட்டுக்கு காண்பிக்காமலேயே வைத்துள்ளார். எண்ணூர் துறைமுகத்திற்கு ஆய்வு சென்ற போது சூழலியல் ஆர்வலரும், ஆய்வாளருமான நித்யானந்தா ஜெயராமன் கமலுடன் இருந்தார். இன்று விவசாயிகளை கமல் சந்தித்தபோது, நீரியியல் வல்லுனர் எஸ்.ஜனகராஜன் உடனிருந்தார். ஒவ்வொரு துறையின் வல்லுனர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பிறகே களத்திற்கு வருகிறார் கமல்.

எனவேதான் அவரால் எதையும் முன்கூட்டியே சரியாக கணிக்க முடிகிறது. எண்ணூரிலும் அப்படித்தான், சென்னை வெள்ளமும் அப்படித்தான் கணிக்கப்பட்டது. ஆனால் நாம்தான் அவரை, 'நாஸ்டர்டாமஸ்' என்ற வட்டத்திற்குள் அடைத்து வைத்துள்ளோம். இது ஏதோ விஷேச சக்தியால் நடப்பதாக கற்பனை செய்துகொள்கிறோம். தமிழகத்தில் ஒரு ஆற்றையே காணாமல் செய்துள்ளனர் என்ற பகீர் குற்றச்சாட்டை இன்று முன்வைத்த கமல் அதுகுறித்த விவரங்களை தனது குழு சேகரிப்பதாக கூறியுள்ளார்.

கமல் எண்ணூர் மண்ணிலிருந்து காலை எடுத்த அரை மணி நேரத்திலேயே கலெக்டர் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறிவிட்டார். எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு கூட இவ்வளவு வேகமாக தீர்வு கிடைத்தது இல்லை. ஏனெனில் யதார்த்தத்தோடு, வாழ்வியலை தொடும் பிரச்சினைகளோடு கமல் களமாடுகிறார். இதனால்தான் அவரது நடவடிக்கையை பார்த்தால் ஆட்சியிலுள்ளவர்களுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில், தீர்வு கொடுக்காவிட்டாலும், பதிலையாவது கொடுக்கிறார்கள். இதுதான் கமலின் மாற்று அரசியல் வெற்றி.

காணாமல் போன ஆற்றை கண்டுபிடிப்பதை போல, ஏரிகளையும் குளங்களையும், கிரானைட் மலைகளையும், ஆற்று மணல்களையும், தென் தமிழக கடலோர மணல் கொள்ளைகளையும் கமல் பேச ஆரம்பித்தால் அதுதான் மக்களின் வரவேற்பை பெறும் அரசியலாக மாறும். கறை வேட்டி கட்டிக்கொண்டு மேடையில் முழங்கிய காலம் மலையேறிவிட்டது. இது டிவிட்டரில் அரசியல் பேசும் யுகம். ஜீன்ஸ் பேண்ட் போட்டபடி மக்களை சந்திக்கலாம் என்று கமல் நடத்திக்காட்டிய மேஜிக், அந்த அரசியலின் நீட்சி.

கமல் அரசியல் கட்சிதான் தொடங்க வேண்டும் என்று கிடையாது. எதற்கும் 'காம்ப்ரமைஸ்' ஆகாமல் மக்களின் நிஜ பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வுகளையும் முன்னெடுத்தால், அதுதான் மாற்று அரசியல். கட்சி தொடங்கி, நிர்வாகிகளை நியமித்து, பணத்தை வாரி இறைத்து அதன் மூலம் பலம் பெற்று அரசிடம் கேள்விகளை முன்வைப்பதெல்லாம் பழைய கதை. அப்படியான அரசியல் மக்களுக்கு சலித்துவிட்டது. செலவிட்ட பணத்தை ஈட்டுவதில்தான் அவர்கள் குறியாக இருப்பார்கள் என்பதை உணர்ந்த சமூகம் இது. சல்லிப்பைசா செலவின்றி, பதவி எதிர்பார்ப்பின்றி கமல் இதேபோன்று மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதுதான் மாற்று அரசியல். மக்கள் விரும்பும் அரசியல். நீங்கள் கட்சியே தொடங்க வேண்டாம் கமல், இப்படியே மக்களின் தலைவராக தொடர வாழ்த்துக்கள்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES