LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

Administrator••• 1
avatar

Films on India
avatar

Films on India


29/10/2017, 4:10 pm

திரைப்படங்களை அவற்றின் உள்ளடக்கங்களைப் பொறுத்து பல்வேறு வகைமைகளாகப் பிரிக்கின்றார்கள். நகைச்சுவை, புனைமருட்சி (திரில்லர்), சண்டை, சாகசம், குடும்பக்கதை, வரலாறு, தொல்கதை, அறிவியல் புனைவு, பேய்பிசாசுப் புனைவு, இசை, காதல் என்று அந்த வகைமைகள் நீள்கின்றன. ஆங்கிலத்தில் இவற்றை காமெடி, ஆக்சன், அட்வெஞ்சர், டிராமா என்று தெளிவாக வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக்கூட நாம் இன்னும் ஆக்கவில்லை. அட்வெஞ்சர் என்பதைச் சாகசம் என்னும் வடமொழிச் சொல்லால்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். திரைப்படம் தோன்றிய காலகட்டத்திலிருந்து நாமும் படமெடுக்கிறோம். ஆனால், ஷாட் (shot) என்பதற்கு உரிய தமிழ்ச்சொல்லைச் செய்யவே இல்லை. ஷாட் என்பதற்குச் சுடுவு என்ற சொல்லை நான் ஆக்கிப் பயன்படுத்துகிறேன். நிற்க.

ஒவ்வொரு வகைமைத் திரைப்படத்திலும் அதன் உள்ளடக்கம் வெவ்வேறாக இருக்கும். நகைச்சுவைத் திரைப்படத்தின் காட்சிகள் நகைச்சுவையையே குறியாகக்கொண்டு நகரும். காதல் திரைப்படங்களில் காதலின் அனைத்து நிலைகளையும் வடித்தெடுப்பதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்படி ஒவ்வொரு வகைமையும் அதன் உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டிலங்கும். திரைப்படத்தின் வகைமையைக் குறித்த அறிவோடு இருந்தால்தான் அதை எப்படி நேர்க்கோடு பிசகாமல் ஆக்கலாம் என்று எண்ணுவீர்கள். இந்தத் தெளிவே இல்லாதவர்கள் எல்லா உள்ளடக்கங்களையும் உள்ளிட்டவாறு ஒரு திரைக்கதையை எழுதித் தோற்றுப்போவார்கள். நம்மைக் கவராத படங்கள், படுதோல்வியுற்ற பெரும்படங்கள் போன்றவற்றை எடுத்துப் பார்த்தால் அவற்றில் இத்தகைய உள்ளடக்கக் குழப்பம் நேர்ந்திருப்பதைக் காணலாம். ஒரு திரைப்படம் முதலில் அதன் உள்ளடக்கச் செம்மையை அடைய வேண்டும். அதுவே அதன் முதல்வெற்றி.

தமிழ்த் திரையுலகின் பொற்காலங்கள்! Ilaiyaraaja-29-1509255857

தமிழில் திரைத்தொழில் தோன்றி வளரத் தொடங்கிய காலத்திலிருந்து இங்கே நாடகங்களாய் நடிக்கப்பட்டு வெற்றி பெற்ற அனைத்துக் கதைகளையும் படமாக்கினார்கள். ஒரு நாடகம் ஒவ்வொரு முறையும் நிகழ்த்தப்படுவதற்கு மாற்றான வடிவமாகத்தான் திரைப்படத்தைப் பார்த்தார்கள். அதனால் அன்றைய திரைப்படத்தின் உள்ளடக்கம் அந்நாளைய நாடக உள்ளடக்கத்தை அப்படியே அடியொற்றியது. வரலாறு, பழங்கதை, தொல்கதை, வாய்மொழிக் காப்பியங்கள் ஆகியவற்றையே அந்நாளைய திரைப்படக் கதைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. கல்கியின் 'தியாக பூமி" திரைப்படமாக எடுக்கப்பட்டபோதுதான் நிகழ்காலத் தன்மையோடும் குடிமக்கள் கதைகளைத் திரைப்படங்களாக்கும் முனைப்பு முன்வைக்கப்பட்டது.

முதல் இருபது முப்பதாண்டுகளுக்கு அரசர் அரசியர் கோலோச்சிய கதையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது பராசக்தி என்ற திரைப்படத்தின் வெற்றிதான். 1952ஆம் ஆண்டு அத்திரைப்படம் வெளியானபோதும் அடுத்த பத்தாண்டுகளில் பெரிதாய் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து அரசர் கதைகளே பெரும்பான்மையாக வந்தன. எம்ஜிஆர் தமது முதல் குடிமக்கள் கதைத் திரைப்படமான 'திருடாதே'வில் நடித்தது 1961ஆம் ஆண்டில்தான். அதன் பிறகே அவர் அரசகதைத் திரைப்படங்களைக் குறைத்துக்கொண்டார்.

எம்ஜிஆர் அரசியலில் வென்றதற்கு ஒவ்வொருவரும் விதம்விதமான காரணங்களைக் கூறுவார்கள். நல்லவராக நடித்தார், திரைப்படங்களில் ஏழைகளுக்குச் சார்பான நாயகராக நடித்தார், படத்தில் புகைபிடிக்க மாட்டார், மதுவைத் தொடமாட்டார், பெண்களிடம் கண்ணியம் தவறாதிருப்பார், தம் படங்களில் அரசியல் கூறுகளை இதமாகப் புகுத்தினார் என்று பல காரணங்களைச் சொல்வார்கள். அவற்றுக்கெல்லாம் மூத்ததாக ஒரு காரணமும் முண்டு. எம்ஜிஆர் அரசகதைப் படங்களில் நடித்தபோது மிகச்சிறந்த அரசனாக, நம்பிக்கைக்குரிய இளவரசனாக, மக்களுக்கான தளபதியாக, அறமல்லாதவற்றைத் தட்டிக் கேட்பவராக நெடுங்காலம் நடித்ததும் இன்றியமையாத காரணம்தான். அத்தகைய பாத்திரங்கள் வழியாக அவர் தம்மை நல்லாட்சியின் முகமாகக் கட்டமைத்துக்கொண்டார்.

அறுபதுகளில் தமிழகத்தில் அரசியல் வெம்மை நிலவியது. அந்த வெம்மை திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. அக்காலகட்டத்தில்தான் தமிழில் மிகச்சிறந்த திரைப்படங்கள் தோன்றின. இயக்குநர் பாலுமகேந்திராவுடனான என் நேர்ப்பேச்சு ஒன்றில் "தமிழ்த் திரையுலகின் பொற்காலம் என்று எதைக் கூறுவீர்கள்?" என்று கேட்டேன். "ஐயத்திற்கிடமின்றி அறுபதுகள்தாம்" என்றார். அதுமட்டுமில்லை, "ஒரு திரைப்படத்தின் மிகச்சிறந்த வெளிப்பாட்டு வடிவம் கறுப்பு வெள்ளைதான்" என்றார்.

அறுபதுகளில்தான் ஒவ்வோர் உள்ளடக்கத்திற்கும் வகைமைக்கும் ஒரு செவ்வியல் எடுத்துக்காட்டுகளாகத் திகழத்தக்க திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. திரைப்படத்தின் கதைக்கிளைகள் விரிவுபடத் தொடங்கின. நகைச்சுவைத் திரைப்படத்திற்கு இன்றும் எடுத்துக்காட்டாகத் திகழவல்ல 'காதலிக்க நேரமில்லை' அக்காலகட்டத்தில் எடுக்கப்பட்டதே. அறுபதுகளின் பாடல்கள் காலத்தை விஞ்சி நிற்கின்றன. புராணப்படம் என்றால் அது திருவிளையாடல்தான். காதல் கதைக்குத் தில்லானா மோகனாம்பாள்தான். சண்முகசுந்தரம் - மோகனாம்பாள் என்னும் இரண்டு கலைஞர்களுக்கிடையே முகிழ்த்த பீடும் பெருமையும் பெற்றியும் நிறைந்த காதலைப்போன்ற ஒன்றை இன்றுவரை யாரும் எடுத்துக்காட்டவில்லை. பீம்சிங்கும் கே.எஸ். கோபாலகிருஷ்ணனும் எடுத்தளித்த பேருணர்ச்சி ததும்பும் படங்களை இன்றைக்கும் பார்த்து உருகலாம். தமிழ்த் திரைப்படங்களின் பொற்காலம் என்று அறுபதுகளைத்தான் கூறவேண்டும்.

எழுபதுகளில் பன்னிறப்படங்கள் வழக்கமாயின. காதலே முதற்பொருளாகிய படங்கள் மிகுந்தன. சண்டைக் கதாநாயகர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு கூடியது. புதிய இசைப்போக்குகள் திரைப்படங்களில் இடம்பெற்றன. நன்கு நடனமாடக் கூடியவர்கள் நாயக வெளிச்சம் அடைந்தார்கள். இந்தப் போக்கு அப்படியே விரிவாக்கும் பெற்று எண்பதுகளை அடைந்தது.

எண்பதுகளில் இளமை, கல்லூரி, காதல் என்பவை முதற்பொருளாயின. தமிழ்க் குமுகாயத்தின் பெருந்திரளான பிள்ளைகள் தத்தம் கல்லூரிகளில் முதலடி வைத்த காலகட்டம் அது. ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பெருவாரியாகத் தலையெடுக்கத் தொடங்கிய காலம். எண்பதுகளில் நாம் மேற்சொன்ன அனைத்துத் திரைப்பட வகைமைகளிலும் பொருட்படுத்தத் தக்க படங்கள் வந்தன. ஊமை விழிகள் என்னும் புனைமருட்சித் திரைப்படம் மரபான திரைப்பட முதலாளிகளை விழிவிரிய வைத்தது. அதே நேரத்தில் இளையராஜாவின் இசைக்கரங்களைப் பற்றிக்கொண்டு ஊர்ப்புற வாழ்க்கையை முன்வைத்து எடுக்கப்பட்ட ஏராளமான படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. இப்படி எல்லாப் போக்குகளுக்கும் இடமிருந்த எண்பதுகளைத் தமிழ் திரையுலகின் இரண்டாம் பொற்காலம் என்றே கூறலாம்.

- கவிஞர் மகுடேசுவரன்

Message reputation : 100% (2 votes)
தமிழ்த் திரையுலகின் பொற்காலங்கள்!

On: 'FILMS OF INDIA'

You cannot reply to topics in this forum