ஆக்டோபஸை சாப்பிட்ட கமல்ஹாசன்... கமல் பெர்சனல் பக்கங்கள்!

Admin
தினமும் காலை இரண்டு மணி நேரம் யோகா. எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் யோகாவைத் தவறவிட மாட்டார். பிறகு, நண்பர்களுடன் சந்திப்பு. தொடர்ந்து படிப்பு... படிப்பு... படிப்பு. புத்தகத்தில் முக்கியமான கருத்துகளை அடிக்கோடிடுவார். காலத்துக்கும் அந்தப் புத்தகம் மனதில் பதித்த கருத்துகளை மறக்க மாட்டார். தினமும் மாலை மூன்று மணி நேரம் ஜிம்மில் பழியாகக் கிடப்பார். திருமண வரவேற்பு, மற்ற நிகழ்ச்சிகளில் கடைசியாக வந்து கலந்துகொண்டு வாழ்த்த இதுவே காரணம். வெளிநாடு, வெளியூர் என எங்கு சென்றாலும் அவருடைய உடற்பயிற்சியாளர் சூரிக்கும் ஒரு டிக்கெட் உண்டு.

கமலுக்கு பிடிக்காத ஒரு விஷயம் பொய் சொல்வது. பொய் சொல்பவர்களை பக்கத்தில் அண்ட விட மாட்டார். பேசும்போது எச்சில் முழுங்கிக்கொண்டு பேசுவதை கண்டுபிடித்துவிட்டால் அந்த நபருடன் அதன் பிறகு பேசமாட்டார். சாதத் ஹசன் மண்டோ எழுத்துகள் மிகவும் பிடிக்கும். அதற்காகவே உருது கற்றுக்கொண்டார்.

அசைவ உணவுகள் குறிப்பாக சைனீஸ் உணவுகளில் விருப்பம் அதிகம். நன்றாக சாப்பிடுவார். ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து, சமைத்துச் சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவார். அது நமக்கே ஒரு மாதிரியாக இருக்கும்.

முடியாது, கஷ்டம் இந்த இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தினால் பிடிக்காது. பக்கா நாத்திகர்.

மும்பையில் இருக்கும் ஸ்ருதி, அக்ஷரா இரு மகள்களும் அடிக்கடி அப்பாவைப் பார்க்க மட்டுமே சென்னை வந்து செல்வார்கள். அவர்களுக்கு கமல், நெருக்கமான நண்பர் மட்டுமே. நோ அட்வைஸ்... நோ கண்டிப்பு முன்பு நாகேஷ் நெருக்கமான நண்பர். வயசு வித்தியாசம் இல்லாமல் சகலமும் கதைப்பார்கள். இப்போது பேச்சாளர் கு.ஞானசம்பந்தன்.

முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்! 'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு, அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு திசைக்குப் பயணப்பட்டது அதற்குப் பிறகுதான்!

கமலின் தந்தை உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன், சந்திரஹாசன், கமல் மூவரும் சிதையின் அருகில் நிற்க, திரும்பிப் பார்த்த கமல் 'அண்ணா, நீங்களும் வாங்க' என இருவரை
அழைத்தார். அவர்கள் ஆர்.சி.சக்தி, ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா.

ஃபிலிம்ஃபேர் விருதை 17 முறை வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்! ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வந்த 'உணர்ச்சிகள்'தான் கமலைத் தனிகதாநாயகனாக ஆக்கியது. ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்த படம் 'பட்டாம்பூச்சி'!

எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்! தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி மொழிப் படங்களில் நடித்திருக்கிற ஒரே தமிழ் நடிகர் கமல்தான்! தன் உடலைத் தானம் செய்திருக்கிறார் கமல். சினிமாவில் இத்தகைய முன் மாதிரி இவர்தான்! கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!
கமல், சாருஹாசன், சுஹாசினி என அவரது குடும்பத்தில் இருந்தே மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள்!

பிரசாத் ஸ்டுடியோவில் அகேலா கிரேன் இறக்குமதி ஆகியிருந்தது. அதை இரவோடு இரவாகச் சென்று பார்த்த முதல் நபர் கமல். பிறகுதான் பி.சி.ஸ்ரீராம் போன்றவர்கள் வந்து பார்த்தார்கள். தொழில்நுட்பத்தின் மீதுகொண்ட தீராத ஆர்வம்தான் காரணம்!

பட்டு வேட்டி பிடிக்கும். தழையத் தழையக் கட்டிக்கொண்டு ஆபீஸ் வந்தால், அன்று முழுக்க உற்சாக மூடில் இருப்பார்! தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு என எட்டு மொழிகள் கைவந்த வித்தகர்! 'உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?' என்று கேட்டால், 'நான் நடிக்கப் போகும் எனது அடுத்த படம்' என்பார்.

கமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்!

'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?' என்று கமல் முன்பு நடத்திய 'மய்யம்'பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில், கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'! முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்குப் பிடித்தமானது. கூடவே பிளாக் டீ!

'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு', 'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா', 'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது', 'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்', 'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை', 'மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' - இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!

தொகுப்பு - ஆர்ஜி

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES