Navigation


 Movie Review


 Go back to the forum

FILMS OF INDIA   

மெர்சல் - விமர்சனம்

Admin | Published on the 4/11/2017, 9:30 pm | 57 Views

மெர்சல் - விமர்சனம்

நடிகர்கள்: விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா, வடிவேலு

ஒளிப்பதிவு: விஷ்ணு

இசை: ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பு: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

இயக்கம்: அட்லீ


மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தர வேண்டிய அத்யாவசிய சேவையான மருத்துவத்தை கார்ப்பொரேட் வியாபாராமாக்கிவிட்ட கொடுமையை ஒரு மாஸ் ஹீரோ மூலம் மீண்டும் சொல்லியிருக்கிறார்கள் மெர்சல் படத்தில்.

படம் தொடங்கும்போது ரமணா பட பாணியில் மருத்துவத் துறை சார்ந்த நால்வர் கடத்தப்படுகிறார்கள். சில டாக்டர்கள் கொல்லப்படுகிறார்கள். போலீஸ் அதிகாரி சத்யராஜ் குழுவின் தேடுதல் முடிவில் விஜய் கைது செய்யப்படுகிறார். விசாரணையில் பல அதிரடி விஷயங்கள் வெளியில் வருகின்றன. விஜய்யின் இந்த செயல்களின் பின்னணி என்ன? அவர் டாக்டர்களை குறிவைப்பது ஏன்? என்பதுதான் படத்தின் கதை.

ஒரு படத்தின் பாதிப்பில் அதே மாதிரி சாயல் கொண்ட இன்னொரு படம் எடுக்கலாம். தப்பில்லை. ஆனால் அதே மாதிரி காட்சிகள் வைப்பேன் என அடம் பிடிப்பது தவறு. இந்த தவறை தொடர்ந்து செய்கிறார், மெர்சலிலும் செய்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. சிவாஜி, அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம், ஒரு காட்சியில் பாபா... என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. ஒரு பட சாயலில் எடுத்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று ஏழெட்டு படங்களில் கை வைத்திருக்கிறார் போலிருக்கிறது.

முழுக்க மருத்துவம், அதில் நடக்கும் தில்லுமுல்லுகள் சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஆலோசனைக்கு ஒரு மருத்துவரையும் உடன் வைத்திருந்தால் நிறைய முரண்களைத் தவிர்த்திருக்கலாம். மூன்று மணி நேரம்.. அதில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ப்ளாஷ்பேக். 30 நிமிடக் காட்சிகளில் கத்தரி போட்டிருக்கலாம்.

அரசியலுக்கு வருவதென்றால் விஜய் நேரடியாகவே வரலாம். யாரும் தடுக்கப் போவதில்லை. அதைவிட்டுவிட்டு, சினிமாவில் அல்லக்கைகளை விட்டு 'நீங்க அரசியலுக்கு வந்தே தீரணும்... வரலன்னா விடப் போறதில்லை... பதவி நிச்சயம்..' என்றெல்லாம் அலற வைப்பது ரொம்பவே அமெச்சூர்த்தனமாக உள்ளது. இனி இதெல்லாம் வேண்டாம் விஜய்.. உங்க லெவல் வேற!

இனி பாஸிடிவ் பக்கத்துக்கு வருவோம்...

படத்தின் முழு முதல் ப்ளஸ் விஜய் விஜய் விஜய்! மனிதர் ஆளே அப்படி ஒரு அம்சமாய் தெரிகிறார். வேட்டி கட்டி வந்ததற்காக வெளிநாட்டு விமான நிலையத்தில் அவமானத்துக்குள்ளாகி, பின் தான் யாரென்பதைக் காட்டி நெஞ்சு நிமிர்த்தும் காட்சியில் தொடங்கி, ஜிஎஸ்டியை வெளுத்து வாங்கும் காட்சி வரை... அப்ளாஸ்களை அள்ளுகிறார். மூன்று பாத்திரங்கள். மூன்றிலும் ஜொலிக்கிறார். அந்த ப்ளாஷ்பேக் காட்சிகளின் நீளம் குறைத்திருந்தால் இன்னும் பாராட்டுக்களைப் பெற்றிருப்பார் தளபதி!


விஜய் மிகச் சிறந்த நடனக் கலைஞர் என்பது திரையுலகுக்கே நன்கு தெரியும். இனியும் அவரை படத்துக்கு நான்கு பாடல்களில் நடனமாட வைப்பது சரிதானா? நல்ல பக்குவமான கதைகளில், பாத்திரங்களில் அவரைப் பயன்படுத்த வேண்டாமா? அந்தப் படத்தில் இப்படி அரசியல் நைய்யாண்டிகளை வைக்க ஒரு தைரியம் வேண்டும். விஜய், அட்லீ இருவருமே இதை தெரியாமல் வைத்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் தங்கள் ஆதங்கங்களை அப்படி கைத்தட்டி வெளிப்படுத்துகிறார்கள் (இதைப் பார்த்து பயந்துதான் வெட்டச் சொல்லிவிட்டார்கள் போல!). படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். சமந்தா கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். நித்யா மேனனுக்கு முக்கியத்துவம் அதிகம். காஜல் ஒரு துணை நடிகை மாதிரி வந்து போகிறார்.

எஸ் ஜே சூர்யா:

இன்னொரு ரகுவரன் மாதிரி வர வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.

வடிவேலு: எதிர்ப்பார்த்த மாதிரியே அவரை வெறும் காமெடியனாக வைக்கவில்லை. குணச்சித்திர நடிகராக்கியிருக்கிறார்கள். லேசான காமெடியுடன் தன் பாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார் வைகைப் புயல்.

விஷ்ணுவின் ஒளிப்பதிவு பர்ஃபெக்ட். ஆனால் ரஹ்மானின் இசையில் ஒரு பாடல் மட்டும்தான் தேறுகிறது. பின்னணி இசையும் மெச்சும்படி இல்லை.

விஜய் என்று பெரும் நடிகரின் கால்ஷீட், ரஜினி தவிர யாருக்கும் கிடைக்காத பெரும் பட்ஜெட் என ஒரு பிரமாண்ட கேன்வாஸ் கிடைத்தும், அவற்றை இன்னும் சரியாகப் பயன்படுத்தத் தவறி இருக்கிறார் அட்லீ என்பதுதான் உண்மை! ஆனால் இது படத்தின் வணிக ரீதியான வெற்றியைப் பாதிக்கும் என்று சொல்ல முடியாது. தீபாவளி வெள்ளம் இந்தப் படத்தைக் கரை சேர்த்துவிடும் என்பதும் உண்மை!

About the author